சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் சந்திரசேகரன் செய்திக்குறிப்பு: ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு சேர்க்கை கட்டணம் செலுத்திய தொகை அல்லது அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ரூ.500 மற்றும் கல்விக்கட்டணம் செலுத்திய தொகை அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு ரூ.350 வழங்கப்படும்.
பராமரிப்புக் கட்டணமாக விடுதியில் தங்காமல் பயில்பவர்களுக்கு ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை மாதந்தோறும் 100ம், விடுதியில் தங்கி 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.600 வீதம் பத்து மாதங்களுக்கு மட்டும் கணக்கிட்டு வழங்கப்படும். பள்ளிப் படிப்பிற்கான கல்வித்தொகை பெறுவதற்கு முந்தைய பள்ளி இறுதித் தேர் வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங் களை உரிய சான்றுகளுடன், பயிலும் பள்ளிகளில் ஜூலை 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப விபரங்களை பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பு வாரியாக பிரித்து, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு ஜூலை 15ம் தேதிக்குள் "சிடி'யில் பதிவு செய்து சமர்ப்பிக்கவேண்டும். கல்வி உதவித் தொகை (புதியது) விண்ணப்ப படிவங்களை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.