Sunday, September 7, 2008
கேலிச்சித்திரமும் - நமது அணுகுமுறையும்:
தினமலர் ஏட்டில் வெளியான கேலிச்சித்திரத்தின் பாதிப்புக்களை – முஸ்லிம்களின் கொந்தளிப்பையும், போராட்டத்தையும் கண்டு வருகின்றோம்.
ஓர் முஸ்லிம் தன் உயிரினும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றான்.
அது அவனது நம்பிக்கையின் அடையாளங்களில் ஒன்று.
அந்த நம்பிக்கை புண்படுத்தப்படும் போது மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
ஒர் உண்மையை கேலிச்சித்திரத்தை வெளியிட்டவரும், அந்த பத்திரிக்கை ஆசிரியர்களும் நன்கு உணர வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முழு உலகுக்கே வழிகாட்டியாக வந்தவர் என்ற செய்திதான் அது.
அத்.21 – வ.எண்:107. இறைவன் கூறுகின்றான் “'நபியே! உம்மை நாம் உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பி உள்ளோம்".
எனவே ஒர் குறிப்பிட்ட நாட்டுக்கு, சமூகத்துக்கு என்று இல்லாமல், முழு உலகுக்கும் வழிகாட்டியாக, நன்னெறியை போதிப்பவராக, தீய நெறிகளை தடுப்பவராக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியமான – கடமையான ஒன்றுதான். அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
சாத்தியமான, ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வது மிகவும் பயன் தரக்கூடியது.
நீண்ட கால அடிப்படையில் உதவக்கூடியது.
மனமாச்சர்யங்களை வளர்க்காமல், மன இணக்கத்தை– மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த பெரிதும் துனை புரிய வல்லது.
இத்துடன் நின்று விடாமல், சில ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை நாம் பேண வேண்டும்.
I. ஆக்கபூர்வமான அணுகுமுறைகள்:
1. சட்டத்தின் மூலமாக பிரச்சனையை சந்திப்பது.
2. ஊடகங்கள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்வதுடன், போதிய விளக்கங்களை தருவது.
3. அமைதி வழியில் போராட்டம் நடத்துவது.
4. சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர்களை நேரில் சந்திந்து நமது கருத்துக்களை தெரிவிப்பது – கண்டனத்தை நேரில் சமர்ப்பிப்பது.
5. அரசுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றினைந்து குரல் கொடுப்பது.
6. இது போன்ற சூழல்களிலாவது சமுதாயம் ஓர் அணியில் திரள்வது –நமது எதிர்ப்பை ஒருமுகப்படுத்துவது அவசியம்.
II. அழைப்பாளனாக நாம் செய்ய வேண்டியது என்ன?
1. குறைந்த பட்சம் ஒர் நபர், ஐந்து முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நபி வழியையும்,
இஸ்லாத்தையும் எடுத்துக் கூற, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.
2. முழு மனித சமூகத்துக்கும் நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்து நல்வழிப் படுத்துபவராகவும்தான் நபி(ஸல்) அனுப்பப்பட்டுள்ளார்கள். (34:28)
என்ற இறைச் செய்தியை எல்லோருக்கும் பரப்ப வேண்டும்.
3. “நபிகள் நாயகம், உலக மக்களுக்கு ஒர் அருட்கொடை” என்ற (21:107) இறை வாக்கையும், மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.
4. நபி(ஸல்) வாழ்வில் ஓர் துறைக்கு மட்டும் என்றில்லாமல் - சகலத் துறைகளுக்கும் வழிகாட்டியாக,
பேச்சளவில் மட்டும் அல்லாமல் - நடந்து காட்டிய – செயல்படுத்தி வெற்றி கண்ட,
ஓர் அழகிய முன்மாதிரி என்பதை யாவருக்கும் புரிய வைக்க வேண்டும்.
III – நபிகள் நாயகமும் - நமது வாழ்க்கையும்:
1. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைப் புரிந்து நமது வாழ்வில் வாய்மையுடன் பின்பற்றுதல் வேண்டும்.
நபியின் மீது நாம் கொண்டுள்ள நேசம், நமது தினமலர் பத்திரிக்கைக்கு எதிரான எதிர்ப்பில் காட்டப்படுவதுடன் நில்லாமல்,
- முழு வாழ்விலும், அண்ணலாரை வழிகாட்டியாக ஏற்று நடக்க வேண்டும்.
2. எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகளுக்கு, இறை வழிகாட்டலை, நபி வழியை மூல ஆதரமாக எடுத்து நடக்க வேண்டும்.
3. நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், வழிகாட்டல் தவிர வேறு யாருடைய பேச்சையும் சத்தியத்துக்கு அளவுகோலாக கொள்ளக் கூடாது.
4. நமது குடும்பத்து உறுப்பினர்களிடம், நண்பர்களிடம் சொந்த பந்தங்களிடம் அண்ணலார்(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையைப் போதிக்க வேண்டும்.
5. நபி (ஸல்) அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பு மற்றும் நேசம், அனைத்து நேசங்களை விடவும் மோலோங்கி இருக்க வேண்டும்.
6. ஆர்பாட்டத்துடன் தேவை ---- கல்வி, பொறுமை, தூர நோக்கு, அழைப்புப்பணி, சொல்லில்-செயலில் நபி வாழ்க்கை.
ஆம். நபி வழியில் நமது வாழ்க்கை, காலத்தின் கட்டாயமும், நமது ஈருலக வெற்றிக்கான உத்திரவாதமும்.
அன்புடன்
இறைவழி சகோதரர்கள்